கிணற்றுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு


கிணற்றுக்குள் அழுகிய நிலையில்  வாலிபர் உடல் மீட்பு
x

திண்டுக்கல் அருகே துக்கம் விசாரிக்க வந்த வாலிபர், கிணற்றுக்குள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

உணவு விடுதியில் வேலை

திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோடு மேற்குதெருவை சேர்ந்தவர் டென்சிங்குமார் (வயது 34). கேட்டரிங் படித்த இவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள உணவு விடுதியில் வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி பிரிஸ்கா தமிழரசி. இந்த தம்பதிக்கு 10 வயதிலும், 7 வயதிலும் 2 மகள்கள் உள்ளனர். குமுளியில் வேலை செய்ததால் டென்சிங்குமார், தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார்.

இந்தநிலையில் டென்சிங்குமாரின் உறவினர் ஒருவர், கடந்த மாதம் 26-ந்தேதி வெள்ளோட்டில் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டென்சிங்குமார் குடும்பத்துடன் வெள்ளோடு வந்தார். துக்க காரியம் முடிந்த அடுத்த நாள் (27-ந் தேதி) இரவு 8 மணி அளவில் டென்சிங்குமார் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அம்பாத்துரை போலீஸ் நிலையத்தில், அவரது மனைவி பிரிஸ்கா தமிழரசி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கிணற்றுக்குள் உடல்

இதனிடையே வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. பசுமாட்டில், முதலில் கரக்கும் சீம்பாலை கிணற்றில் ஊற்றுவது வழக்கம். அதன்படி வெள்ளோடு மயானம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் நேற்று காலை பசுவின் சீம்பாலை அந்த குடும்பத்தினர் ஊற்றினர்.

அப்போது அந்த கிணற்றுக்குள் ஆணின் உடல் ஒன்று மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் கிணற்றில் இருந்து, உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்குள் கிடந்தது 17 நாட்களுக்கு முன்பு மாயமான டென்சிங்குமாரின் உடல் என்று தெரியவந்தது. இதனை அவரது மனைவி, உறவினர்களிடம் காண்பித்து போலீசார் உறுதி செய்தனர். அதன்பிறகு டென்சிங்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கவாட்டு சுவர் இல்லாமல், புதர்மண்டி கிடந்த அந்த கிணற்றுக்குள் டென்சிங்குமார் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் டென்சிங்குமாரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அதனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் போலீசார் கடும் சிரமம் அடைந்தனர். அதனை ஓலை பாயில் சுற்றி தனியார் ஆம்புலன்சு மூலம் எடுத்து சென்றனர். எனவே இனிவருங்காலத்தில் இதுபோன்ற அழுகிய நிலையில் உள்ள உடலை சம்பவ இடத்துக்கே அரசு டாக்டர்கள் வந்து பிரேத பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story