குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதில்லை - திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் கீதாஜீவன்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 9 லட்சம் குழந்தைகளுக்கு சத்தான இனிப்பு வகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று 75 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் சத்துணவு திட்டத்தில் எந்த பகுதியிலும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதில்லை என்பதை பாஜகவினருக்கு தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
அங்கன்வாடிகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஒன்பது லட்சம் குழந்தைகள் கண்டறியப்பட்டு இரண்டு மாதங்களுக்கு சத்தான இனிப்பு வகை ஒன்றை வழங்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவர்களில் உடல் குறைபாடுடைய 45 ஆயிரம் குழந்தைகள் கண்டறியப்பட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் அவர்களுக்கு உயர்சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.