இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.13¾ லட்சம் கொள்ளை


இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.13¾ லட்சம் கொள்ளை
x

இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.13¾ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

இருசக்கர வாகன விற்பனை நிறுவனம்

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகில் அங்காளம்மன் வணிக வளாகத்தில் நியூ யோகம் மோட்டார்ஸ் என்ற பெயரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த துரை(வயது 51) என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக அவரது மகன் தினேஷ் உள்ளார். ேமலும் விற்பனை மற்றும் பொது மேலாளராக சின்னசேலம் தெற்குத்தெருவை சேர்ந்த மதன்குமார்(37) பணியாற்றி வருகிறார்.

வசூல் தொகை

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கடந்த 23-ந் தேதி தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த வகையிலும், வாகனங்களை சர்வீஸ் செய்த வகையிலும் வசூலான தொகை ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்து 235 இருந்துள்ளது.

வங்கி விடுமுறை காரணமாக அந்த தொகை முழுவதையும், நிர்வாக இயக்குனர் அறையில் உள்ள மேஜை டிராயரில் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

பணம் கொள்ளை

தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று காலை நிறுவன ஊழியர்கள் சாந்தி மற்றும் சந்தியா ஆகியோர் ஷோரூமை திறந்து, நிர்வாக இயக்குனர் அறையில் உள்ள சாமி படங்களுக்கு மலர் வைத்து பூஜை செய்ய சென்றுள்ளனர். அப்போது ஜன்னலின் 'கிரில்' கம்பி அறுக்கப்பட்டு, சில கம்பிகள் அகற்றப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் திடுக்கிட்டனர்.

மேலும் மேஜை டிராயரின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணமும் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து நிறுவனத்தின் பொது மேலாளர் மதன்குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெரம்பலூருக்கு விரைந்து வந்த அவர், நிறுவனத்தை பார்வையிட்ட பின்பு இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், கொள்ளை நடந்த நிறுவனத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் நின்ஜா வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. நிறுவனத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடிய நாய் சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

வணிக நிறுவனத்தினர் அச்சம்

இந்த கொள்ளை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கொள்ளையர்களின் புகலிடமாக மாறியுள்ள பெரம்பலூர் நகரில் உள்ள கடைகள், ஷோரூம்களில் அடுத்தடுத்து நடந்துவரும் கொள்ளை சம்பவங்களால் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் நடந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள், இதற்காக பல நாட்கள் நோட்டமிட்டுள்ளனர். தங்களது உருவங்கள் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்களில் ஒருவன், அலுமினிய படிக்கட்டில் ஏறி கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்துள்ளான். இதைத்தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர் என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த நிறுவனத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள பிரபல எலக்ட்ரானிக் ஷோரூமில் சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story