ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி-முகமூடி அணிந்து வந்த நபர்களுக்கு வலைவீச்சு


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி-முகமூடி அணிந்து வந்த நபர்களுக்கு வலைவீச்சு
x

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை

காளையார்கோவில்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொள்ளை முயற்சி

காளையார்கோவில் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). காளையார்கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு 8 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து வீட்டில் நுழைந்து திருட முயற்சித்துள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராமல் வெளியில் நின்றிருந்த செல்வராஜ் கூச்சலிட்டதால் கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிச்சென்று விட்டனர். இதுகுறித்து காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தார். கையில் காயம் அடைந்த செல்வராஜ் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களுக்கு முன்பே வீடு திரும்பியுள்ளார்.

மர்ம நபர்கள்

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் முகமூடி அணிந்த 4 பேர் காம்பவுண்டு சுவர் ஏறி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்துள்ளனர். வீட்டிலிருந்த வாட்ச்மேனை இரண்டு பேர் கடுமையாக தாக்கினர். வீட்டை பூட்டிக்கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவியை நோக்கி கதவை திறக்குமாறு சத்தம் போட்டு இரும்பு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள் கூச்சலிட்டதும் வாட்ச்மேன் வெளியில் ஓடி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்ததன் காரணமாக மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்ததும் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் மற்றும் காளையார்கோவில் ஆய்வாளர் கணேச மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஒரே வீட்டில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொழில் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது கொள்ளை முயற்சி தானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story