திருவண்ணாமலை ஏ.டி.எம்.களில் கொள்ளை; திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
திருவண்ணாமலை மாவட்ட ஏ.டி.எம்.களில் கொள்ளை தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் சோதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் மர்ம நபர்கள் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொள்ளையர்கள் ஊடுருவதை தடுக்கும் நோக்கத்தில் போலீசார் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருத்தணி
திருத்தணி உட்கோட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் 17 இடங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தீவிர வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதி நகர், பொதட்டூர்பேட்டை கூட்டுச்சாலை, அகூர் கூட்டு சாலை, ரயில் நிலையம், வேலஞ்சேரி கூட்டுச்சாலை, கே.ஜி. கண்டிகை, பொன்பாடி சோதனை சாவடி, காட்ரோடு ஆகிய 8 இடங்களில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது. இதேபோல் திருவலாங்காடு பகுதியில் 3 இடங்களிலும், ஆர்.கே.பேட்டை பகுதியில் 4 இடங்களிலும் வாகன தணிக்கை நடைபெற்றது.
மேலும் திருத்தணி கோட்டத்தில் உள்ள 65 ஏ.டி.எம். மையம் மற்றும் வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படும் வகையில் பராமரிக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத ஏடிஎம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வங்கி ஏடிஎம் மையங்களில் 2 ஷிப்ட்கள் அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்ட் விக்னேஷ் தெரிவித்தார்.