நடைபயிற்சி சென்ற பேராசிரியை கஞ்சா போதையில் அடித்து இழுத்து சென்ற கொள்ளையன்...!
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
திருச்சி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த சீதாலெட்சுமியை, தர தரவென இழுத்து ஓரமாக வீசி உள்ளார். பின்னர் சீதாலட்சுமியின் இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கண்ட்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும், குடிப்போதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார், தற்போது தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.
அதையடுத்து அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார்.
இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.