ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய பிரபல கொள்ளையன், 2 மாதங்களுக்கு பிறகு வளசரவாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைதானார்.
தப்பி ஓட்டம்
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற பர்மா சீனு (வயது 52). இவர் மீது பல்வேறு சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது. சேலத்தில் நடந்த சங்கிலி பறிப்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்ட பர்மா சீனு, கடந்த மே மாதம் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்காக புழல் சிறைக்கு அழைத்து வந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை ஏமாற்றிவிட்டு பர்மா சீனு தப்பி ஓடிவிட்டார். அவரை வண்ணாரப்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.
வளசரவாக்கத்தில் கைது
இந்த நிலையில் வளசரவாக்கம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர் 3 பவுன் நகையை பறித்து சென்றார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது, ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய பிரபல கொள்ளையன் பர்மா சீனு என்பது தெரிந்தது.
இதையடுத்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் தலைமையிலான போலீசார், வளசரவாக்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி சுமார் 2 மாதங்களுக்கு பிறகு பர்மா சீனுவை கைது செய்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய பர்மா சீனு, அங்கிருந்த ஒரு மோட்டார்சைக்கிளை திருடிவிட்டு வளசரவாக்கம் சென்றார். அங்கு ஒரு பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்தார். பின்னர் அவற்றை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து செலவு செய்து உல்லாசமாக சுற்றியது தெரிந்தது. அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.