இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கொள்ளையடித்தவர் கைது


இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கொள்ளையடித்தவர் கைது
x

இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

ரூ.13¾ லட்சம் கொள்ளை

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள அங்காளம்மன் வணிக வளாகத்தில் நியூ யோகம் மோட்டார்ஸ் என்ற பெயரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாளான கடந்த 25-ந் தேதி, அந்த நிறுவனத்தில் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்து 235 கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள ஜன்னலின் கம்பிகள் அறுக்கப்பட்டு, சில கம்பிகள் அகற்றப்பட்டிருந்தன. கண்காணிப்பு கேமரா இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விரட்டி பிடித்தனர்

இந்த சம்பவம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் மதன்குமார் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் கொள்ளையர்களை பிடிக்க பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீசார் ரமேஷ், அலெக்ஸ், இளவரசன், மாரிமுத்து, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பாலக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக நடந்து வந்த ஒருவர், போலீசாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தார். இதைக்கண்ட போலீசார், அவரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

துருவித்துருவி விசாரணை

விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, அமரபூண்டி அருகே மேலக்கோட்டையை சேர்ந்த கோச்சடை பாண்டியன் என்ற பாண்டியன் (வயது 43) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. அந்த பணம் யாருடையது என்று பாண்டியனிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்தனர்.

அப்போது, அந்த பணம் பெரம்பலூரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் கொள்ளையடித்தது என்பதும், அந்த பணத்தை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையோரத்தில் உள்ள புதரில் புதைத்து வைத்திருந்தாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

மேலும் அந்த பணத்தை பாண்டியன் எடுத்து வந்தபோது சிக்கியதாகவும், கொள்ளையடித்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை பாண்டியன் ஏற்கனவே செலவு செய்து விட்டதும், தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பாண்டியனிடம் இருந்த ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாண்டியனை கைது செய்த போலீசார் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ெபரம்பலூரில் நடந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சில நாட்களிலேயே அதில் சம்பந்தப்பட்டவரை பிடித்த தனிப்படை போலீசாரை பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டு மணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்

கொள்ளை வழக்கில் கைதான பாண்டியன் சிறு வயதில் இருந்தே திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், தற்போது பெரிய பெரிய நிறுவனங்களில் தனி ஆளாக பணத்தை கொள்ளையடிப்பதாகவும், அதில் கிடைக்கும் பணத்தில் குறைந்த தொகையை குடும்ப செலவுக்கு வீட்டிற்கு கொடுத்து விடுவதாகவும், போலீசில் மாட்டிக்கொண்டால் சிறை வாசம் அனுபவித்துவிட்டு மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், விசாரணையின்போது பாண்டியன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பாண்டியன் மீது சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Next Story