அரைகுறையாக பெயர்க்கப்பட்டு அலங்கோலமாய் கிடக்கும் சாலைகள்
தேனியில் சீரமைப்பு பணிக்காக சாலைகள் அரைகுறையாக பெயர்க்கப்பட்டு அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்
சாலை சீரமைப்பு
தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. சாலையை சீரமைக்கும் முன்பு ஏற்கனவே உள்ள பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு புதுப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், தேனி நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சாலைகளை பெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சமதர்மபுரம், பாரஸ்ட்ரோடு, என்.ஆர்.டி. சாலை, கே.ஆர்.ஆர். நகர் மெயின்ரோடு, பழைய அரசு மருத்துவமனை சாலை ஆகிய சாலைகள் ராட்சத எந்திரங்கள் மூலம் பெயர்க்கப்பட்டன. பல இடங்களில் சாலை அரைகுறையாக பெயர்க்கப்பட்டன. வேகத்தடைகளும் அரைகுறையாக அகற்றப்பட்டன.
விபத்து சம்பவங்கள்
இதனால் இந்த சாலைகள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன. சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பரவிக் கிடக்கின்றன. இதனால், ஒரு வார காலமாக தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று பகலில் கே.ஆர்.ஆர். நகர் மெயின் ரோட்டில் மொபட்டில் வந்த நபர் சறுக்கி விழுந்து காயம் அடைந்தார்.
காலை நேரங்களில் பள்ளி குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் பெற்றோர், பணிக்கு செல்லும் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பரிதவித்து வருகின்றனர். எனவே, சாலை சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.