ஈரோட்டில் கொட்டித்தீர்த்த பலத்த மழை; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது


ஈரோட்டில் கொட்டித்தீர்த்த பலத்த மழை; சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
x

ஈரோட்டில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு

ஈரோட்டில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், ஈரோட்டை பொறுத்தவரை மழை இல்லாத நிலையே நீடித்தது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாலை நேரங்களில் வானம் இருண்டு மழை பெய்வதுபோல மேகங்கள் சூழ்ந்தாலும், திடீர் என்று சுழற்காற்று வந்து மழை மேகங்களை கலைத்துச்செல்லும் நிலை நீடித்தது. சில நேரங்களில் ஓரிரு துளிகள் மட்டுமே விழுந்து வந்தது.

வெள்ளம் பெருக்கெடுத்தது

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்தன. வழக்கமாக வீசுவதுபோல சுழற்காற்றும் வீசியது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக பலத்த மழை கொட்டியது. சுமார் 45 நிமிடங்கள் இடி-மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஈரோடு சாலைகளில் மழை நீர் ஆறுபோல பாய்ந்தது. சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்கள் நிரம்பி வழிந்தன.

ஈரோடு மாநகரில் பஸ் நிலையம், சத்தி ரோடு, வீரப்பன்சத்திரம், முனிசிபல் காலனி, நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வ.உ.சி.பூங்கா காய்கறி சந்தை உள்பட நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மாணவ-மாணவிகள்

மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சிரமம் அடைந்தனர். ஆனால் மழை விட்டதும் மாணவ- மாணவிகள் சாலைகளில் தேங்கிய தண்ணீரில் மிதித்து விளையாடிக்கொண்டே வீடுகளுக்கு திரும்பினார்கள்.

முன்னதாக பள்ளிக்கூடங்களில் இருந்து குழந்தைகளை அழைத்து வர சென்ற பெற்றோர் மழையில் நனைந்து அவதிக்கு உள்ளானார்கள்.

மழையால் நேற்று குளிர்காற்று வீசியது.

சோலார்

இதேபோல் சோலார், வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 30 நிமிடத்துக்கும் மேலாக நீடித்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதைத்தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்தியூர்

மேலும் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் சாரல் மழை பெய்தது.

இதனால் தவுட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதி, புதுப்பாளையம், பர்கூர் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story