பாலக்கோடு ரேஷன் கடையில்மண்எண்ணெய் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
பாலக்கோடு:
பாலக்கோட்டில் உள்ள ரேஷன் கடையில் சீராக மண்எண்ணெய் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடை
பாலக்கோடு மந்தைவெளியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ரேஷன் கடையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வட்ட வழங்கல் துறையின் மூலம் உணவு பொருட்கள் மற்றும் மண்எண்ணெய வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக முறையாக மண்எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் வழங்ப்படுவதில்லை என தெரிகிறது.
இதற்கிடையே நேற்று கார்டுதாரர்களுக்கு மண்எண்ணெய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிலருக்கு மண்எண்ணெய் வழங்கப்பட்டது. பின்னர் அங்கு நின்ற பொதுமக்களிடம் குறைந்த அளவில் மண்எண்ணெய் வந்துள்ளதால் இருப்பு இல்லை என்றும், மீண்டும் மண்எண்ணெய் வந்தால் மட்டுமே மீதி வழங்க முடியும் என விற்பனையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முறையாக மண்எண்ணெய் வழங்ககோரி பாலக்கோடு- பெல்ரம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உரிய நடவடிக்கை எடுக்கபபடும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.