மகேந்திரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு


மகேந்திரமங்கலம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள 22 சென்ட் நிலத்தை கிராம மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் இருந்த குடிநீர் தொட்டி, தானிய களம் ஆகியவற்றை சேதப்படுத்தி அதன் மேல் மண் கொட்டி மூடியதாகவும் தெரிகிறது. இதனை தடுக்ககோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மனு கொடுத்த நபர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை சீனூர் கிராமத்தை சேர்ந்த கலை சக்கரவர்த்தி (வயது 35), சபரி குமார் (27) ஆகியோர் மீது மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை அறிந்த கிராம மக்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் திடீரென பாலக்கோடு- ஓசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கிராம மக்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி யளித்தனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக பாலக்கோடு- ஓசூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story