நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்கப்பணி; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு


நெல்லிக்குப்பத்தில்          சாலை விரிவாக்கப்பணி; நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

சாலை விரிவாக்கப்பணிகள்

கடலூர் கோண்டூர் முதல் மடப்பட்டு வரை சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை ஒருபுறத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டும், மற்றொரு புறத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்காமலும், சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரிவாக்கப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கடந்த ஓராண்டாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை சென்னை தலைமையிடத்து கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாசலம் தலைமையில் கோட்ட பொறியாளர் (பொறுப்பு) வெள்ளிவேலன், உதவி கோட்ட பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்கப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், சமூக ஆர்வலர் குமரவேல், கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் ஜெய பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாசலத்திடம் கூறுகையில், சாலை விரிவாக்கப் பணிகள் என்பது இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைத்து வாகனங்கள் எந்தவித இடர்பாடுகள் இல்லாமல் செல்ல வேண்டும்.

ஆனால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நெல்லிக்குப்பம் சடக்கு பஜார், பஸ் நிலையம், கீழ்பட்டாம்பாக்கம் உட்பட 4 இடத்தில் ஒரு பஸ் சென்றால் எதிர்புறம் வரக்கூடிய வாகனங்கள் ஓரமாக நின்று, அதன் பிறகு செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது என்பதனை அதிகாரிகள் முன்னிலையில் பஸ்சை நிறுத்தி காண்பித்து விளக்கம் அளித்ததுடன், மேற்கண்ட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தீர்வு காண நடவடிக்கை

இதனை கேட்ட கண்காணிப்பு பொறியாளர் வெங்கடாசலம் சாலை விரிவாக்கப் பணிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிச் சென்றார். இருப்பினும் சாலை விரிவாக்கப்பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகளை கண்டித்து வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லிக்குப்பத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story