கள்ளக்குறிச்சியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சாலை பாதுகாப்பு
கள்ளக்குறிச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி
இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு சாலை விதிகளை பின்பற்றி வாகனங்கள் ஓட்டவேண்டும், மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது, தலைக்கவசம் உயிர் பாதுகாப்பு, வளைவுகள், பாலங்களில் முந்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியானது கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காந்திரோடு, குளத்து மேட்டுத்தெரு, கடைவீதி, மந்தவெளி உள்ளிட்ட முக்கிய வீதிகள் சென்று மீண்டும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தனபால் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.