சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஆனைமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆனைமலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் நெடுஞ்சாலைத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்று சாலை பாதுகாப்பின் அவசியம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேரணியும் நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கோணம், சேத்துமடை ரோடு, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இப்பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், கோட்ட பொறியாளர் மனுநீதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ் குமார், உதவி பொறியாளர் அருண் கார்த்திக், ஹூசேன், பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமசுந்தரி மற்றும் பள்ளி, தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியின் போது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள், பொது மக்களுக்கு வழங்கினர்.