மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செந்துறை:
நெடுஞ்சாலைத்துறையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் உத்தண்டி முன்னிலையில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோடி வரவேற்றார். சாலைப் பாதுகாப்பு அலகின் விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ஸ்ரீகாந்த் பேசினார். விழுப்புரம் உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன், மாணவர்களை சாலை பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்கச்செய்தார்.
அதைத்தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு, விதிமுறை மீறல், மாணவ, மாணவிகள் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும், ஒரு மாணவன் தன்னுடைய இல்லத்தில் இருந்து பள்ளியை அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்தும், தமிழகத்தில் ஒரு வருடத்தில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காக்கும் தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டம் குறித்தும், பொன்னான நேரம், ஆம்புலன்சை அழைப்பது குறித்தும் தோழன் அமைப்பின் ஜெகதீஸ்வரன், கோவர்த்தன், நந்தகுமார் ஆகியோர் விளக்கி கூறினர். மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதை மற்றும் வாசகப் போட்டி நடத்தப்பட்டு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செந்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப் பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.