சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை சீரமைக்கும் பணி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி நடுத்தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இடையாத்தங்குடி அண்ணா நகர் முதல் நடுத்தெரு வழியாக கணபதிபுரம் மெயின் ரோடு வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலை முழுவதும் சேதமடைந்து இருந்தது. அதையடுத்து இந்த சாலையை சீரமைக்க முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

பயன்படுத்த முடியாத நிலை

பின்னர் சாலை முழுவதும் பொக்லின் எந்திரம் மூலம் ஜல்லிக்கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு அப்படியே போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு கூட சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கணபதிபுரம், இடையாத்தங்குடி சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் சாலையில் நடந்து வர முடியாமல் தவறி விழுந்து காயம் படுகின்றனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.


Next Story