மொடக்குறிச்சி அருகே சீராக மின்சாரம் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மொடக்குறிச்சி அருகே சீராக மின்சாரம் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

மொடக்குறிச்சி அருகே சீராக மின்சாரம் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே சீராக மின்சாரம் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் சின்னியம்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கண்ணாங்காட்டு மேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் தறிபட்டறை, கோழிப்பண்ணை, லேத் பட்டறை செயல்பட்டு வருகிறது. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் நேற்று காலை 8.20 மணி அளவில் ஈரோடு-வெள்ளக்கோவில் ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

மின்மாற்றி பழுது

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் லக்காபுரம் துணை மின்நிலைய ஊழியர்கள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'கடந்த 25 நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மின்மாற்றி வெடித்தது. ஆனால் இதுவரை மின்மாற்றியை மின்சார வாரியம் சீரமைக்கவில்லை. இதனால் அடிக்கடி மின் வினியோகம் தடைப்பட்டு வருகிறது.

அதிகாலை 5 மணிக்கு மின்சாரம் தடைபட்டால் மீண்டும் 10 மணி வரை மின் வினியோகம் இருப்பதில்லை. இதனால் காலை நேரங்களில் தொழிற்சாலைக்கு மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமப்படுகின்றனர். அதேபோல் விவசாயம் செய்வதற்கு மின்வினியோகம் இல்லாததால் விவசாயத்திற்கு தேவையான மோட்டார்களை இயக்க முடியவில்லை. எனவே சின்னியம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரில் பழுதான மின்மாற்றியை சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

சீரமைப்பு

அதற்கு அதிகாரிகள், 'சீரான மின்சாரம் வழங்கப்படும்' என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து லக்காபுரம் துணை மின் நிலைய ஊழியர்கள் மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியலால் ஈரோடு-வெள்ளக்கோவில் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story