அம்மாபேட்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அம்மாபேட்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2022 3:02 AM IST (Updated: 5 July 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஆற்று தண்ணீர்

அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி 1-வது வார்டில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு காவிரி ஆற்று தண்ணீர் மேல்நிலை தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய் வழியாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தொட்டியின் கொள்ளளவு குறைவாக இருந்ததால் தேவையான அளவு குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகிக்கபட முடியவில்லை.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி 1-வது வார்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அதன்பின்னர் சீராக தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு குறைந்த அளவு தண்ணீரே வினியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திடீரென ஒலகடம்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் குட்டைமேடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி துணை தாசில்தார் சரவணன், ஒலகடம் பேரூராட்சி தலைவர் கே.வேலுசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுதாராணி மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

காவிரி குடிநீர் தொட்டி 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்டது. அதனால் அதிக அளவு தண்ணீரை நிரப்பி அனைத்துபகுதிக்கும் முறையாக குடிநீர் வழங்க முடியவில்லை.

புதிய தண்ணீர் தொட்டி கட்டும் வரை 1-வது வார்டு பகுதிக்கு லாரியில் தண்ணீர் கொண்டுவந்து வினியோகி்ப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தார்கள்.

இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டார்கள்.

இந்த போராட்டத்தால் நேற்று காலை 8:15 மணி முதல் 9.15 மணி வரை 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story