ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணி
அருப்புக்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
பூமிபூஜை
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், மேலும் விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இ.பி. காலனி மற்றும் ராமலிங்கா நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அதே போல் தீர்த்தக்கரை மற்றும் திருக்குமரன் நகரில் தலா ரூ.18 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
உரிய நடவடிக்கை
இந்த நிகழ்ச்சியின்போது அப்பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். பாளையம்பட்டி-மதுரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையோர இருபக்கமும் மழைநீர் வடிகால் வாறுகால் அமைத்து தரமான சாலைகள் அமைத்து தரப்படுவதோடு குடிநீர் பிரச்சினையயும் விரைந்து தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகலா, காஜாமைதீன் பந்தே நவாஸ், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.