ரூ.3½ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள்
சீர்காழி அருகே ரூ.3½ கோடியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
சீர்காழி அருகே ரூ.3½ கோடியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
சாலை மேம்பாட்டு பணிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் செம்பதனிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட கீழையூர்-காத்திருப்பு இணைப்பு சாலை பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணிகள், சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
உணவின் தரம்
இதனைத் தொடர்ந்து அல்லிவிளாகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது உணவு தரமாக சமைக்கப்படுகிறதா? என சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். இதையடுத்து ரேஷன் பொருட்கள் வினியோகம், அங்கன்வாடி மைய வசதிகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதேபோல் தொடக்கப் பள்ளிக்கு சென்ற அவர் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுத்திறன் குறித்து ஆசிரியரை பாடம் கற்பிக்க சொல்லி கேட்டறிந்தார்.
வகுப்பறை கட்டும் பணி
காத்திருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் தெய்வானை, சிவக்குமார், கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி முத்துக்குமரன், அன்புமணி மணிமாறன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.