சாலையை சீரமைக்க வேண்டும்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன போக்குவரத்து
திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் நாகை பைபாஸ் சாலை பகுதியில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு உளுந்து, பச்சை பயிறு, பருத்தி போன்ற விளைபொருட்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இங்கு பருத்தி கொள்முதல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகிறது.இதனால் வேன், டிராக்டர், லாரி என வாகன போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது.
வேகத்தடை
நாகை பை-பாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்லும் இணைப்பு சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய நிலையில் மிகவும் பழுதடைந்து கப்பிகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையோர சாக்கடைகள் வழிந்து ஓடும் அவல நிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூட இணைப்பு சாலை பிரியும் இடத்தில் வேகத்தடை இல்லாமல் உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
இதனால் விளை பொருட்களை ஏற்றி கொண்டு வரும் வாகனங்கள் நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழங்குமுறை விற்பனை கூட இணைப்பு சாலையில் திரும்பும்போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து வாகனங்கள் பைபாஸ் சாலையில் ஏறும் போது ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே நாகை பைபாஸ் சாலையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் செல்லும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.மேலும் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.