ரூ.10 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் ரூ.10 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலய சாலையில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சேகரகுரு அருள்ராஜ் பிச்சைமுத்து, காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் குளோரிந்தாள், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் அனுராதா, கவுன்சிலர் தெய்வானை, வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எம்.ராஜா, தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே அதிகவரி செலுத்தக்கூடிய தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை முறையாக வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. ஆன்லைன் ரம்மியை ரத்து செய்ய கவர்னர் மறுக்கிறார்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய பா.ஜனதா அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி நடைபயணத்துக்கு பிறகு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தமிழ்நாட்டில் பா.ஜனதாவை மக்கள் ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை பிரித்து அந்த கட்சி சின்னாபின்னமாகி மோசமான சூழ்நிலைக்கு செல்ல பா.ஜனதாதான் காரணம். அ.தி.மு.க.வை தாறுமாறாக கிழித்து ஒட்ட முடியாத அளவிற்கு பா.ஜனதாவினர் செய்து விட்டனர். நாங்குநேரி பகுதி மக்களுக்கு டோல்கேட்டில் சலுகை அளிக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
களக்காடு அண்ணாசிலை பஸ்நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்தை குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ''அடுத்த மாதத்துக்குள் (ஏப்ரல்) குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் அமைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், களக்காடு நகர தலைவர் ஜார்ஜ் வில்சன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.