திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
இறந்த மூதாட்டி உடலை கொடுக்காமல் இழுத்தடிக்கும் திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மூதாட்டி உறவினர்கள் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
மூதாட்டி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 55). இவர் தனது குடும்பத்தோடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கம்மாள் சிறுகுடி பூசாரிப்பட்டி குலதெய்வ கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோவிந்தம்மாளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கோவிந்தம்மாளை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் இறந்ததாக சான்றிதழ்...
இந்நிலையில் கோவிந்தம்மாள் இயற்கையாக மரணம் அடைந்தார் என்று துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சான்றிதழ் வாங்கி வரும்படி திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோவிந்தம்மாளின் உறவினர்கள் அந்த சான்றிதழை வாங்கிகொண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள், கோவிந்தம்மாள் விபத்தில் உயிரிழந்தார் என்று சான்றிதழ் வாங்கி கொண்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இயற்கையாக மரணம் அடைந்தவரை, விபத்தில் மரணம் அடைந்ததாக சான்றிதழ் வாங்கி தர முடியாது என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் இன்று மூதாட்டி உடலை அவர்கள் கொடுக்கவில்லை. இந்நிலையில் மூதாட்டி உடல் இன்று அடக்கம் செய்யப்படுவதாக உறவினர்கள் அனைவரும் ஆலங்குடியில் உள்ள அவரது வீட்டில் காத்திருந்தனர்.
சாலை மறியல்
மூதாட்டி உடலை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தர முடியாது என்ற தகவலை அறிந்த மூதாட்டி உறவினர்கள் ஆலங்குடி அரசமரம் பகுதியில் திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.