ராமசமுத்திரம் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கக்கோரி பெண்கள் சாலைமறியல்


ராமசமுத்திரம் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கக்கோரி பெண்கள் சாலைமறியல்
x

பள்ளிப்பட்டு அருகே ராமசமுத்திரம் சமத்துவபுரத்தில் தங்களுக்கு வீடு ஒதுக்கி தர வேண்டும் என்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமசமுத்திரம் கிராமத்தில் சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட இந்த வீடுகள் திறப்பு விழா காண்பதற்கு முன்பு ஆட்சி முடிந்து போனதால் திறப்பு விழா காணவில்லை. இதையடுத்து அ.தி.மு.க. ஆட்சியிலும் இந்த சமத்துவபுரம் திறக்கப்படாமல் வீடுகள் பழுதடைந்து காணப்பட்டன. அதன் பிறகு தற்போது தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த வீடுகள் புதுப்பிக்கப்பட்டன.

அதன் பிறகு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் பட்டியல் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில் தங்களது பெயர்கள் இடம் பெறவில்லை என்றும் ஏற்கனவே சமத்துவபுரம் கட்டியபோது தங்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன என்றும், எனவே தங்களுக்கும் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை பொதட்டூர்பேட்டை - திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் பொதட்டூர் பேட்டை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கு விரைந்து சென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அவர்கள் அமைதிப்படுத்தினார்கள். அவர்களது கோரிக்கைகளை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி அவர்களை சமாதானப்படுத்திய பிறகு அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story