பா.ஜ.க.வினர் சாலை மறியல்
கருமத்தம்பட்டியில் பேனர்களை போலீசார் அகற்றியதால் ஆத்திரம் அடைந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை நடைபயணம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சூலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். இதையொட்டி கருமத்தம்பட்டியில் அவரை வரவேற்கும் வகையில் நகர பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் பிரமாண்ட பேனர்கள் வைத்தனர். ஆனால் முறையான அனுமதி பெறாததால் அந்த பேனர்களை போலீசார் அகற்றினர். மேலும் பேனர்களை ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்து, 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் குவிந்தனர். பின்னர் வாகனங்களை விடுவிக்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி, இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசாரின் கடும் எச்சரிக்கைக்கு பிறகு பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.