சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
மடத்துக்குளம் அருகே நீண்ட நாட்களாக இழுபறியாகி வரும் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் அருகே நீண்ட நாட்களாக இழுபறியாகி வரும் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விரிவாக்க பணி
உடுமலையில் இருந்து மைவாடி வழியாக கணியூர், கடத்தூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில் செங்கண்டிபுதூர் அருகே அமராவதி வாய்க்கால் குறுக்கிடுகிறது. இந்த வாய்க்கால் மீது அமைக்கப்பட்டிருந்த மிகக் குறுகலான பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வழித்தடத்தில் மின் பகிர்மான நிலையம், காகித ஆலைகள், வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டவை உள்ளதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
மேலும் கல் குவாரிகளில் இருந்து கற்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகளுக்கான மண் உள்ளிவட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்களும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் குறுகலான ரோட்டில் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பாலம் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கின.
விரைந்து முடிக்க கோரிக்கை
ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும் பணிகள் முடிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
'சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக ரோட்டின் ஒருபுறம் பள்ளம் தோண்டப்பட்டு அதில் ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவை நிரப்பப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழித்தடத்தில் செல்வது பாதுகாப்பற்றதாகவே உள்ளது. மேலும் வாகனங்கள் ஒன்றையொன்று எதிர் எதிரே கடக்கும் போது புழுதி பறப்பதால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.