குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்நிலைகள் வறண்டு உள்ளன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தென்மேற்கு பருவமழை
கூடலூர் பகுதியில் மே மாத இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்வது வழக்கம். நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்தது. இந்தநிலையில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த மாதமும் மழை பெய்ய வில்லை. தினமும் மாலை நேரத்தில் பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் காய்ந்து கிடந்த வனப்பகுதிகள் பசுமையாக மாறியது. காலை முதல் மாலை வரை மிதமான வெயிலும், அதன் பின்னர் சாரல் மழையும் இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. ஆனால் பருவமழை தீவிரம் அடைய வில்லை.
வறண்ட நீர்நிலைகள்
இதனால் கூடலூர் பகுதியில் உள்ள மாயாறு, பார்வுட் ஆறு உள்பட அனைத்து நீர் நிலைகள் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. எப்போது தண்ணீர் ஓடி கொண்டிருக்கும் நீரோடைகள், தண்ணீர் இன்றி வெறுமனே காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் பருவமழை சரியாக பெய்யாமல் உள்ளதால் குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களின் விளைச்சலும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் மட்டுமே அந்தந்த காலநிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் நடவு செய்ய முடியும். மேலும் குறுமிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் பாதிக்காமல் இருக்கும். தற்போது பரவலாக சாரல் மழை மட்டுமே பெய்வதால் தேயிலை செடிகளுக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.