வாய்க்காலில் கலக்கும் ஆலைகளின் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்


வாய்க்காலில் கலக்கும் ஆலைகளின் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம்
x

புஞ்சை கடம்பங்குறிச்சி வாய்க்காலில் கலக்கும் ஆலைகளின் கழிவுகளால் தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்

கரூர் ஒன்றியம், புஞ்சை கடம்பங்குறிச்சியில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும் தங்களது அன்றாட தேவைகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். மேலும் வாய்க்கால் மூலம் அப்பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களில் பயன்பட்டு வந்தது.

தற்போது, புகழூர் காகித ஆலை, ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசு ஏற்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகி்றனர். மேலும் அந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடிப்பதால் நோய்கள் தாக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீருடன் கலந்து வருகிறது

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

புஞ்சை கடம்பங்குறிச்சியை சேர்ந்த விவசாயி பழனியப்பன்:- இக்கிராமத்தில் ஏராளமானவர்கள் விவசாயத்தை நம்பியே தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வயல்வெளிகளில் கரும்பு வாழை, கோரப்புல் போன்றவைகளை பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மழை அதிகமாக பெய்து வாய்க்காலில் தண்ணீர் ஓடுகிறது. இந்த மழை நீருடன் காகித ஆலை, சாக்கரை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் வழியாக வந்து புஞ்சை கடம்பங்குறிச்சி வாய்க்காலில் அதிகளவில் கலக்கிறது. இதனால் நீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த முடியவில்லை,

சுத்திகரிப்பு செய்ய வேண்டும்

புஞ்சை கடம்பங்குறிச்சி விவசாயி வீரமணி:- இந்த வாய்க்காலில் காகித ஆலை, புகழூர் சர்க்கரை ஆலைகளில் இருந்து வரும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை ஆடு, மாடுகள் குடிப்பதால் அதிகளவில் நோய்கள் தாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தநீரை ெபாதுமக்களுக்கும் பயன்படுத்த முடியவில்லை. எனவே ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும், என்றார்.

வியாபாரம் பாதிப்பு

டீக்கடைக்காரர் சேகர் விஜயா:- வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருவதால், துணிகள் துவைப்பதற்கும், குளிப்பதற்கும் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். தற்போது வாய்க்காலில் துர்நாற்றம் வீச தொடங்கி விட்டதால், வாடிக்கையாளர்கள் பலர் எங்களது கடைக்கு வருவதை தவிர்த்து விட்டனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு விட்டது.

சலூன் கடைக்காரர் கருப்பண்ணன்:- வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் கழிவுநீருடன் சேர்ந்து குப்பைகளும் ஆங்காங்கே தேங்கி நின்று கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் முகம் சுழிக்கின்றனர். இதனால் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story