குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம்
நெல்லிக்குப்பத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. குடிநீரா குடியை கெடுக்கும் நீரா என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் தினந்தோறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கந்தசாமி தெரு, பங்களா தெரு, ராமு தெரு, விஜயலட்சுமி நகர், திடீர் குப்பம் மற்றும் சுற்றுவட்டார தெருக்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. மேலும் குடிநீர் முழுவதும் கருப்பு நிறத்துடன், கழிவுநீர் கலந்து உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உருவாகி வருகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கவுன்சிலர் சத்யா மற்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் பற்றாக்குறை
நெல்லிக்குப்பம் நகராட்சியில் போதுமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால் அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் வரி கட்டவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தரவில்லை என்றால் மக்கள் வரிப்பணம் செலுத்தாமல் இருக்கலாமா என அனைத்து தரப்பு மக்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் வைரல்
இந்த நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துக்கு வார்டு கவுன்சிலர் சத்யா புகார் கடிதம் எழுதி இருந்தார். அதில் மக்களுக்கு வழங்கக்கூடிய "குடிநீரா அல்லது குடியை கெடுக்கும் நீரா" "மக்கள் வாழ்வதற்கு குடிநீரா அல்லது வாந்தி எடுப்பதற்கு குடிக்க குடிநீரா" வரியும் கட்டுகிறோம் ஆனால் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை என கூறப் பட்டிருந்தது. இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.