மானாவாரி நிலங்களில் பயிர்கள் கருகும் அபாயம்
கிணத்துக்கடவு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால், மானாவாரி நிலங்களில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் தென்மேற்கு பருவமழைதொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால், மானாவாரி நிலங்களில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மானாவாரி சாகுபடி
கிணத்துக்கடவு பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழையை நம்பி சோளம், நிலக்கடலை, பொரியல் தட்டை, கொள்ளு உள்ளிட்ட பல்வேறு வகை பயிர்களை மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு சோளம் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், பொரியல் தட்டை 100 ஏக்கர் பரப்பளவிலும், கொள்ளு 60 ஏக்கர் பரப்பளவிலும், நிலக்கடலை 30 ஏக்கர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பருவ மழை தொடங்கும் என்பதை எதிர்பார்த்து விவசாயிகள் முன்கூட்டியே நிலங்களை உழுது மானாவாரி நிலங்களில் பயிர்களை விதைத்தனர். விதைகள் முளைத்து வரும் நேரத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பயிர்கள் கருகும் அபாயம்
வழக்கமாக ஜூன் மாதம் முதலில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி கட்டத்தை எட்டியும் தென்மேற்கு பருவமழை, கிணத்துக்கடவு பகுதியில் தொடங்கவில்லை. இந்த தாமதத்தால் மானாவாரி நிலத்தில் வளர்ந்துள்ள செடிகள் கருகக்கூடிய அபாய நிலையில் உள்ளன. இதன் காரணமாக கடும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை ஏமாற்றி விட்டதால் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாயத்தில் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது.
நஷ்ட ஈடு
பருவமழை தாமதமாகும் காலகட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்ய மானாவாரி நிலங்களில் சேதம் அடைந்த பயிர் செடிகளுக்கு வேளாண்மை துறை மூலம் ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலையில் உள்ள பயிறு வகை செடிகளை வேளாண்மை துறையினர் பாதுகாக்க விவசாயிகளுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.