மாங்கம்வயல்-பொன்னானி இடையே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்


மாங்கம்வயல்-பொன்னானி இடையே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம்-சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 July 2023 7:30 PM GMT (Updated: 4 July 2023 7:30 PM GMT)

மாங்கம்வயல்-பொன்னானி இடையே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

மாங்கம்வயல்-பொன்னானி இடையே குண்டும், குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே மாங்கம் வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லவும் பொன்னானி வழியாக தான் பந்தலூர், கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை காலப்போக்கில் பழுதடைய தொடங்கியது. பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சாலை பல இடங்களில் உடைந்து குண்டும், குழியுமாகவும், பாதாளகுழிகள் நிறைந்தும் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்றுவிடுகிறது. இதுமட்டுமின்றி நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களும் பழுதடைந்து காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் நின்றுவிடுகிறது. இதனால் அவர்களை தொட்டில் கட்டி சுமந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.

குளம் போன்று....

இந்த நிலையில் தற்போது பெய்யும் மழையில் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் குளம் போன்று காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குழியறியாமல் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் வாகன விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, மாங்கம் வயலில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறோம். இங்கிருந்து பந்தலூர், கூடலூர் செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவசர தேவைகளுக்கு செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story