புதர் மண்டிய சாலையால் விபத்து அபாயம்
அத்திப்பாளி-நம்பாலக்கோட்டை இடையே சாலையோரம் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடலூர்
அத்திப்பாளி-நம்பாலக்கோட்டை இடையே சாலையோரம் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
புதர் மண்டிய சாலை
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளியில் இருந்து நம்பாலக்கோட்டை வழியாக ஸ்ரீ மதுரை மற்றும் முதுமலை ஊராட்சிக்கு சாலை செல்கிறது. இதேபோல் கில்லூர் வழியாக கல்லீங்கரை உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சாலை செல்கிறது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது.தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் அத்திப்பாளி-நம்பாலக்கோட்டை இடையே சாலையின் இருபுறமும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கூறி வந்தனர்.
வாகன விபத்துகள்
தொடர்ந்து சாலையோர புதர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதேபோல் இரவில் சிறுத்தை நடமாட்டமும் சாலையில் அடிக்கடி தென்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிள் தொடங்கி ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட பல வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது.
நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் சாலையோர புதர் படர்ந்து காணப்பட்ட நிலையில், எதிரே வந்த வாகனம் தெரியாததால் விபத்தில் சிக்கினார்.
பின்னர் பொதுமக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.