குத்தகைதாரர் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர்களால் பரபரப்பு
ஆண்டி கண்மாயில் மீன்கள் இல்லாததால் ஏமாற்றத்தில் குத்தகைதாரர் வீட்டை முற்றுகையிட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மேலூர் கிராமத்தில் ஆண்டி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை குத்தகை எடுத்த மேலூர் கிராமத்தை சேர்ந்த சிலர் மீன்பிடி திருவிழா நடத்துவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டனர். இதனை அறிந்த சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ேநற்று காலை முதல் ஆண்டி கண்மாயில் குவிந்தனர். காலை 9 மணி அளவில் மீன்பிடி திருவிழா தொடங்கியது. ஆனால் கண்மாயில் மீன்கள் எதுவும் சிக்காததால் மீன் பிடிக்க வந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கண்மாயில் இறங்கிய ஒருவருக்கு கூட மீன் சிக்கவில்லை.
முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் குத்தகைதாரர் வீட்டை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் போலீசார், மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகையிட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள், ஏற்கனவே கண்மாயில் மீன்பிடித்து விட்டு வெறும் கண்மாயை வைத்து ஏமாற்றியுள்ளனர் என்று கூறினர். மேலும் அவர்கள் எங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி கூறினர். இதையடுத்து அவர்களிடமிருந்து பெற்ற பணம் அனைவருக்கும் திருப்பி கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.