கடலூரில் தொடரும் அரிசி விலை உயர்வு
கடலூரில் தொடரும் அரிசி விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய உணவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் அரிசியால் சமைக்கப்பட்ட உணவு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் ஒவ்வொரு வகை அரிசிக்கும், ஒவ்வொரு விதமான நிறம், ருசி, மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகைகளுக்கு ஏற்ப விலை நிலவரமும் வேறுபட்டு காணப்படும். சந்தைகளில் பெரும்பாலும் அரிசியின் ரகத்திற்கு ஏற்ப விலை நிலவரம் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போலவே அரிசி விலை நிலவரத்திலும் ஏற்றத்தாழ்வு இருக்கும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு தேசிய அளவில் அரிசி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த, அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி தடை விதித்தது. மேலும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இருப்பினும் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
விலை உயர்வு
ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் கடலூர் மாவட்டத்தில் அனைத்து ரக அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த மாதம் ரூ.53-க்கு விற்ற ஒரு கிலோ பொன்னி புழுங்கல் தற்போது 56-க்கும், ரூ.52-க்கு விற்பனையான அமெரிக்கன் பொன்னி ரூ.54-க்கும், எச்.எம்.டி. பொன்னி ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆகவும், பொன்மணி ரூ.36-ல் இருந்து ரூ.40, ஐ.ஆர். 50- ரகம் ரூ.38-ல் இருந்து ரூ.40, எச்.எம்.டி. அமெரிக்கன் ரூ.55-ல் இருந்து ரூ.62, கோலம் அரிசி ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆகவும், இடிசல் அரிசி ரூ.30-ல் இருந்து ரூ.34, பாசுமதி அரிசி முதல் ரகம் ரூ.95-ல் இருந்து ரூ.105 ஆகவும், 2-வது ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
இதேபோல் சீரக சம்பா, கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, வரகு அரிசி, சாமை அரிசி உள்ளிட்ட வகை அரிசியின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில், தற்போது அரிசி விலையும் படிப்படியாக அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.