வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு கருகும் நெற்பயிர்கள்
தலைமடை பகுதியில் தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தலைமடை பகுதியில் தண்ணீர் இல்லாததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல் சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை உட்பட டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிதான் முக்கிய பயிராக உள்ளது. ஒரு சில பகுதிகளில் கடலை, எள், உளுந்து, சோளம், கரும்பு, வாழை போன்றவை பயிரிடப்படுகின்றன. இருப்பினும் குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும் நெல் சாகுபடிதான் பிரதானமாக இருந்து வருகிறது.
குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. முன்னதாக தண்ணீர் கடைமடைவரை சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஏரி, பாசன வாய்க்கால்களை தூர்வாரியது.
கருகும் நெற்பயிர்கள்
தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறுவை சாகுபடியே விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இருந்தாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் கடைமடை பகுதிகளில் சாகுபடி பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கிளை ஆறுகளில் தண்ணீர் குறைந்தஅளவே செல்வதால் ஏற்கனவே சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற என்ன செய்வது என்று தவிர்த்து கொண்டு இருக்கின்றனர்.
கடைமடை மட்டுமின்றி தலைமடை பகுதியிலும் போதியஅளவு தண்ணீர் வராததால் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் காயும் நிலையில் உள்ளது. தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே மேலதிருப்பத்துருத்தியில் போதியஅளவு தண்ணீர் இல்லாததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பு
இதனால் தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, குடமுருட்டி ஆற்றில் இருந்து இந்த விளைநிலங்கள் வெறும் ½ கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. தலைமடை பகுதியான எங்களுக்கே தண்ணீர் முறையாக கிடைக்காததால் தற்போது நடவு செய்து 30 நாட்கள் ஆன பயிர்கள் அனைத்தும் கருகத் தொடங்கி விட்டது.
மேலும் விளைநிலங்கள் அனைத்தும் மே மாதத்தில் வெடிப்பது போல் வெடித்துள்ளது. இனிமேல் இந்த பயிர்களை காப்பாற்றுவது என்பது இயலாத காரியம். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை நாங்கள் நகைகளை அடகு வைத்து செலவு செய்தோம். இனி என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளோம்.
எனவே இந்த பகுதியில் உரிய கணக்கீடு செய்து எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.