கலெக்டர் அலுவலகத்தை புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகை
மேல்பாதி கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகை
விழுப்புரம்
புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார் தலைமையில் மாநில செயலாளர் பரணிமாரி, மாவட்ட செயலாளர்கள் திருநாவுக்கரசு, பூவைஆறு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், இவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள், கலெக்டர் பழனியிடம் கொடுத்த மனுவில், விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் வருடத்துக்கு ஒருமுறை 9 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஆதிதிராவிட மக்களுக்கு 7-வது நாள் விழா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதிதிராவிட மக்கள் வரிவசூல் செய்து ரூ.1 லட்சத்தை ஊர் முக்கியஸ்தர்களிடம் வழங்கி வருகின்றனர். ஆனால் கோவிலின் உள்ளே சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டு, தீண்டாமை என்னும் அவலநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி நடைபெற்ற தீமிதி விழாவின்போது ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கதிவரன் மற்றும் அவரது தாய் கற்பகம், தந்தை கந்தன் ஆகியோர் கோவிலுக்கு வழிபட சென்றபோது அவர்களை அங்கிருந்த மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். இதுசம்பந்தமாக போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், ஆதிதிராவிட மக்கள், கோவிலுக்குள்ளே சென்று வழிபட உரிய பாதுகாப்பு வழங்கி அனுமதி வழங்கக்கோரியும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.