தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டப்பணிகள் தலைமை செயலாளர் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடியில் நடைபெற்று வரும் அங்காடி கட்டும் பணி, பம்மல் பகுதியில் ரூ.99.50 லட்சத்தில் நடைபெறும் திருப்பனந்தாள் ஏரி புனரமைப்பு பணி, சித்தாலப்பாக்கம் சாலையில் ஜி.டி. நாயுடு தெருவில் மூடிய வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றை நேற்று தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அவர், அனகாபுத்தூர் மற்றும் பம்மல் பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் பார்வையிட்டதுடன், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் மரக்கன்று வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
செம்பாக்கம் ஒருங்கிணைந்த நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் தாம்பரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரித்து உரமாக்கும் பணியையும், சேலையூர் சுடுகாடு வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், இந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகர நல அலுவலர் பார்த்திபன், கண்காணிப்பு என்ஜினீயர் பாண்டுரங்கன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.