தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்


தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில், 10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.

நாகப்பட்டினம்

ஆய்வு கூட்டம்

நாகை பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில், மாவட்டத்தில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு இயக்குனரும், நாகை மாவட்ட கல்வித் துறை கண்காணிப்பு அலுவலருமான பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், முதல் பருவம் மற்றும் காலாண்டு பாட வாரியான தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தேர்ச்சி சதவீதம்

அதன் அடிப்படையில், நடப்பாண்டில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அடிக்கடி மற்றும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.மேலும், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், மின்சார பழுது ஆகியவற்றை தொழிலாளர்களை கொண்டு சரி செய்தல், பள்ளியின் மேற்கூரை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தினுள் மூடப்படாத கிணறுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு பாதுகாத்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆய்வு செய்ய வேண்டும்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்ய அறிவுரை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, குருக்கத்தி மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கார்த்திகேசன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) லதா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சுந்தர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story