சுங்கக் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் - கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தல்
சுங்க கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சிகள் வலியுறுத்தி உள்ளது.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே, இந்த கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும், மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற மத்திய அரசு, கட்டண உயர்வை அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது.
இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். மத்திய அரசாங்கம் தற்போதைய கட்டண உயர்வை திரும்ப பெற்றுக்கொள்வதுடன், ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தனியார் நிறுவனங்கள் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நலனை பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் சட்டப்பூர்வ கொள்கைக்கு வழியமைத்து வரும் பா.ஜ.க. மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தை ரத்து செய்து, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும்' என்று கூறியுள்ளார்.