சதுரகிரி மலையில் தரிசித்து திரும்பிய பக்தர்கள் இரவில் நடுவழியில் தவிப்பு


கனமழையால் சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பாறைகளும் உருண்டன. கோவிலில் தரிசித்து திரும்பிய பக்தர்கள் நடுவழியில் தவித்ததால் விடிய, விடிய பணி நடந்து சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

கனமழையால் சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பாறைகளும் உருண்டன. கோவிலில் தரிசித்து திரும்பிய பக்தர்கள் நடுவழியில் தவித்ததால் விடிய, விடிய பணி நடந்து சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆடி அமாவாசை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி கோவில்களில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்அன்று அதிகாலை முதலே மலைப்பாதை வழியாக சதுரகிரி மலை ஏறி, நடைபயணமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் பிற்பகல் 3 மணி வரை பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் இருந்து மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். மறுபுறம் கோவிலில் தரிசித்து முடித்தவர்கள் கீழே இறங்கிய வண்ணம் இருந்தனர். இதனால் மலைப்பாதை முழுவதும் பக்தர்கள் மயமாக காட்சி அளித்தது.

கனமழை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததால் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை, பிளாவடி கருப்பசாமி கோவில் ஓடை உள்ளிட்ட நீரோடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கன மழை பெய்ய தொடங்கிய உடனே கோவிலில் இருந்து பக்தர்கள் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகப் பகுதியில் ஏராளமான பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் மலையில் தவித்தனர். மழைக்கு முன்னதாக இறங்கிய பக்தர்கள் நடுவழியில் சிக்கினர். மழையில் செய்வதறியாது திகைத்த அவர்களை மீட்டு, அடிவாரத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

பாறைகள் உருண்டன

இதற்கிடையே சங்கிலி பாறை ஓடைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல பக்தர்கள் சிக்கி தவித்தனர். அந்த சமயத்தில் காராம் பசுத்தடம் பகுதியில் மிகப்பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அந்த பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், சங்கிலி பாறை ஓடை, மாங்கனி ஓடைகளில் மாட்டிக் கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களை மீட்கும் பணியில் இறங்கினர். காட்டாறுகளுக்கு குறுக்கே கயிறு கட்டி விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு அழைத்து வந்தனர்.

டோலி மூலம் தூக்கி வந்தனர்

சதுரகிரி மலை கோவிலில் தங்க வைக்கப்பட்டு, இறங்க முடியாமல் தவித்த பக்தர்கள் சிலரை டோலி மூலம் அடிவாரப் பகுதியான தாணிப்பாறைக்கு நேற்று காலையில் தூக்கிவந்தனர்.

நீரோடை பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று காலை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தாணிப்பாறை நுழைவுவாயில் பகுதியில் வனத்துறை கேட் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். பின்னர் நீர் ஓடைகளில் தண்ணீரின் அளவு குறைந்த பின்னர் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

மீண்டும் மழை அறிகுறி

மலைப்பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறி இருந்ததால் மதியம் 1 மணிக்கு வனத்துறை கேட் மூடப்பட்டது. நேற்று சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் தரிசனத்தை முடித்து விரைவாக கீழே இறங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆடி அமாவாசையையொட்டி இன்று வரை சதுரகிரி கோவிலில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கனமழை பெய்தால், பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story