ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்கள் மறியல் போராட்டம்


ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் 875 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் 875 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் மற்றும் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கு அரசு போக்குவரத்து துறை ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அனைத்து ஓய்வூதியர்களுக்கான அமைப்பின் பொதுச்செயலாளர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார்.

அதனைத்தொடர்ந்து அவர்கள் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

875 பேர் கைது

இதுகுறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும். 87 மாதங்களாக அகவிலைப்படியை வழங்காமல் உள்ளதை கண்டித்தும்,

ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், போக்குவரத்து தொழிலாளர்கள் மீதான ஐகோர்ட்டு உத்தரவுக்கு மேல்முறையீடு செய்த தமிழக அரசை கண்டித்தும் மாநிலம் முழுவதும் 9 அரசு போக்குவரத்து கோட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது என்றனர்.

இதில், அமைப்பின் பொதுச்செயலாளர் பி.செல்வராஜ், நிர்வாகிகள் சேதுராமன், கிருஷ்ணராஜ், ஜெகநாதன், ஜெயராமன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 175 பெண்கள் உள்பட 875 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருணம மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.


Next Story