ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை
பாளையங்கோட்டையில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 61). ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரின் குடும்ப கோவில் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் உள்ளது.
இந்த கோவிலை நிர்வகிப்பது தொடர்பாகவும், வரவு, செலவு கணக்கு பார்ப்பது தொடர்பாகவும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த அவர் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.