68 வயதில் `நீட்' தேர்வு எழுதும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்
சாதிக்க வயது தடையல்ல என்பதற்கு உதாரணமாக 68 வயதில் `நீட்' தேர்வு எழுத ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தயாராக உள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுதுபவர்களின் பெரும்பாலானோர் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகளாக இருப்பார்கள். அல்லது கடந்த 2, 3 ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்துவிட்டு தொடர்ந்து நீட் தேர்வை எழுதுபவர்களாக இருப்பார்கள்.
தடையல்ல
ஆனால், படிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் நிறைய நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என கூறும் அதே நேரத்தில் அந்த நீட் தேர்வை வயதானவர்களும் ஆர்வத்துடன் எழுதி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியன், தர்மபுரியை சேர்ந்த 61 வயதான சிவபிரகாசம் ஆகியோர் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று இருந்தனர்.
அதேபோல் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி எப்படியும் மருத்துவ படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் 68 வயதான முதியவர் நீட் தேர்வை எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இதற்காக நாளை நடக்கும் நீட் தேர்வுக்காக ஹால் டிக்கெட்டையும் அவர் பெற்று விட்டார். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை விட வயதில் மூத்தவர்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
இவரை பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக குடியிருப்பில் வசித்து வருபவர் வக்கீல் ராமமூர்த்தி (வயது 68). இவரது மனைவி கமலி. இவர்களுக்கு அகிலா, கோகிலா ஆகிய 2 மகள்களும், முத்துராமலிங்கம் என்ற மகனும் உள்ளனர். ராமமூர்த்தியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலை கிராமம் ஆகும். கூட்டுறவுத்துறை பால்வளம் தணிக்கை உதவி இயக்குனராக தஞ்சையில் பணி புரிந்ததால் குடும்பத்துடன் தஞ்சைக்கு வந்துவிட்டார்
இவர் அரசு பணியில் இருந்தாலும் தொடர்ந்து படிப்பிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதனால் இதுவரை 28 டிகிரிகள் பெற்றுள்ளார். படிக்கும் ஆர்வம் குறையாததால் இன்னும் தனது படிப்பை தொடர்ந்து வருகிறார். சின்ன வயதில் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவை ஓய்வு பெற்ற பின்னர் தற்போது நிறைவேற்ற முழு முயற்சியுடன் நீட் தேர்வில் பங்கேற்கிறார்.
பேத்தியின் ஊக்கம்
இதுகுறித்து ராமமூர்த்தி கூறுகையில், எனது மகள் வழி பேத்தி கவுசிகா நீட் தேர்வு எழுதினார். கட் ஆப் மார்க் இல்லாததால் அக்ரி படித்து வருகிறார். அவர் எனது டாக்டர் படிப்பின் கனவிற்கு ஊக்கம் கொடுத்து தாத்தா நீங்கள் படியுங்கள், சாதிக்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி நீட் தேர்வுக்கு தயாராகியுள்ளேன். டாக்டர் ஆகி அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றார்.