பணியில் இருந்து ஓய்வுபெற்றார்... 'தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையுடன் விடைபெறுகிறேன்' - வழியனுப்பு விழாவில் சைலேந்திர பாபு உருக்கமான பேச்சு
பணியில் இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு நேற்று வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவர் பேசும்போது, தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்ற பெருமையோடு விடைபெறுவதாக உருக்கமாக கூறினார்.
தமிழ்நாடு போலீஸ்துறையில் 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவரை பெருமைப்படுத்தும்விதமாக அரசு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. சைலேந்திர பாபு தனது மனைவி சோபியா மற்றும் 2 மகன்கள், மருமகளுடன் மாலை 4.30 மணியளவில் ராஜரத்தினம் மைதானத்துக்கு வந்தார். அவரை குதிரைப்படை போலீசார் வரவேற்று அழைத்து வந்தனர்.
சைலேந்திர பாபுவை உயர் போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு சிறப்பு படை போலீசாரின் அணிவகுப்பையும் அவர் ஏற்றார். விழாவின் தொடக்கத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வரவேற்றார். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வாழ்த்துரை வழங்கினார்.
தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா விழாவில் கலந்துகொண்டு சைலேந்திர பாபுவுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டி பேசினார். சைலேந்திர பாபுவுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் நினைவுப்பரிசு வழங்கினார்
விழாவில் சைலேந்திர பாபு உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசியதாவது:-
கடந்த 2 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் போலீஸ்துறைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் பதவியேற்றபோது 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டேன். என்னால் முடிந்தவரையில் அந்த அறிவிப்புகளை செயல்படுத்திக் காட்டி உள்ளேன். நான் பதவி வகித்த இந்த 2 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் சாதி மோதல், மதக் கலவரம் இல்லை.
போலீஸ் துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணிக் காக்கப்பட்டது. இந்த 2 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்ந்தது என்ற பெருமையோடு நான் விடைபெறுகிறேன்.
போலீஸ்துறையில் இப்போது நிறைய இளைஞர்கள் பணியாற்றுகிறீர்கள். சோதனைகள், வேதனைகளை எல்லாம் சவாலாக சந்தித்து, துணிச்சலாக நீங்கள் பணியாற்ற வேண்டும். எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க கூடாது. அப்போதுதான் நீங்கள் பணியில் வெற்றிபெற முடியும். பதவியை நீங்கள் தேடிச் செல்லக் கூடாது. சிறப்பாக பணியாற்றினால் பதவி உங்களை தேடி வரும்.
எனது 93 வயது தாயார் நான் இன்று ஓய்வுபெறும் நிகழ்ச்சியை தொலைக்காட்சி மூலமாக பார்த்துக் கொண்டிருப்பார். எனது பெற்றோர் எனக்கு வழங்கிய சொத்து கல்விதான். அந்த கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது. என் கடமையை சிறப்பாக செய்தேன் என்ற மனநிறைவையோடு விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் பேசி முடித்தபோது பலத்த கை தட்டலோடு அனைவரும் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பல உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். வால்டர் தேவாரம் உள்ளிட்ட ஓய்வுபெற்ற உயர் போலீஸ் அதிகாரிகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சைலேந்திர பாபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களுடன் சைலேந்திர பாபு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.