விழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள்-கலெக்டருக்கு கோரிக்கை


விழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள்-கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அய்யனார் குளத்தை மீட்டுத்தாருங்கள் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம்

கலெக்டரிடம் மனு

விழுப்புரம் அய்யனார் கோவில் குளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன் தலைமையில் அந்த அமைப்பினர், மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் திரு.வி.க. வீதியில் 4.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அய்யனார் குளம். நகரத்தின் சிறந்த நீர்பிடிப்பு பகுதியாக விளங்கும் இக்குளத்தின் ஒருபகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.

தனியாருக்கு சொந்தமான இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அறநிலையத்துறையின் அறிவிப்புகளில் மேற்காணும் குளம், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சொந்தமான குளம் என்று குறிப்பிடப்பட்டு வந்தது.

"இது எவ்வாறு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமானதாகும்?" எனும் கேள்வியை இந்துசமய அறநிலையத்துறையிடம் எழுப்பினோம். இதுதொடர்பாக 20.9.2021 அன்று அக்கோவிலின் செயல் அலுவலரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "ஆஞ்சநேயர் கோவிலை சுற்றியுள்ள குளம் இக்கோவிலுக்கு சொந்தமானது என்றும் இதற்கான பட்டா பெறப்பட்டுள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பட்டா மாற்ற உத்தரவு நகலும் இணைக்கப்பட்டிருந்தது.

பட்டா மாற்றம்

விழுப்புரம் தாசில்தாரால் ஆஞ்சநேய சாமி கோவிலுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக" மேற்காணும் இணைப்பில் உள்ள பட்டா மாற்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பட்டா மாற்ற உத்தரவு தொடர்பான உண்மைத்தன்மை அறியும்பொருட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் விளக்கம் கேட்டு கடந்த 10.8.2023 அன்று விண்ணப்பித்தேன். உரிய நேரத்தில் பதில் கிடைக்கப்பெறாததால் 14.9.2023 அன்று தாசில்தாருக்கு மேல்முறையீடு செய்தோம். இதனைத்தொடர்ந்து 10.10.2023 தேதியில் தாசில்தாரின் கடிதம் வந்தது. அதில், "தாங்கள் கோரும் பட்டா மாற்றம் தொடர்பான கோப்புகள் எதுவும் இவ்வலுவலகப் பதிவறையில் இல்லை" என்றும், "நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு பட்டா மாற்றம் ஏதும் செய்ய இயலாது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் அய்யனார் குளம், பட்டா மாற்றம் தொடர்பான கோப்புகள், மூல ஆவணங்கள் ஏதும் விழுப்புரம் தாலுகா அலுவலக பதிவறையில் இல்லை என்பது அதிர்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. நீர்நிலை புறம்போக்கு இடங்களுக்கு பட்டா மாற்றம் செய்ய இயலாது எனும்போது, அய்யனார் குளத்திற்கு பட்டா மாற்றம் செய்திருப்பது, அதுவும் தாசில்தார் நிலையிலான அதிகாரி செய்திருப்பதாக சொல்வதும் ஆச்சரியத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

குளத்தை மீட்க வேண்டும்

அய்யனார் குளம், ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்பதற்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கொடுத்திருக்கும் ஆவணம் போலியானதாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம்.

எனவே இதன் மீது மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து அய்யனார் குளத்தை மீட்டுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story