ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு
x

முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை கோரையாறு படித்துறை முதல் அண்ணாசிலை வரையிலான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் அப்பகுதியில் உள்ள 105 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்கான காலக்கெடு முடிந்தும் ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றிக்கொள்ளவில்லை.

இதனையடுத்து நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு பொதுமக்கள் தங்களது குழந்தைகள் படிக்கும் ஆலங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை செய்து கொள்வோம்

அப்போது அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது அப்படி அகற்ற முன்வந்தால் எங்களுக்கு மாற்று இடம் தரவேண்டும். இல்லையேல் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Next Story