தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்டது: முதுமலையில் குட்டி யானை சாவு
தர்மபுரியில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்டு, முதுமலையில் பராமரித்து வந்த குட்டி யானை இறந்தது.
கூடலூர்,
தர்மபுரியில் தாயை பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த ஆண் குட்டி யானை பாகன் பொம்மன் மற்றும் வனத்துறையினர் மூலம் மீட்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி அங்கிருந்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் மேற்பார்வையில் குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பாகன் தம்பதியினர் பொம்மன்- பெள்ளி குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குட்டி யானையின் உடல் நலன் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினர், வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணிக்கு குட்டி யானை பரிதாபமாக இறந்தது. இதனால் வனத்துறையினர் மற்றும் பாகன் தம்பதியினர் மத்தியில் சோகம் நிலவியது.
வயிற்றுப்போக்கு
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
குட்டி யானைகளுக்கு மனிதர்கள் உட்கொள்ளும் (லேக்டோஜன்) பால் பவுடர் உணவாக அளிக்கப்படுகிறது. இது செரிப்பதற்கான என்சைம் யானைகளில் சுரப்பது மிகவும் குறைவு. கைவிடப்பட்ட குட்டி யானைகளுக்கு என்சைம்கள் சுரப்பது மிக மிக குறைவு. எனவே, செரிமானம் ஆகாமல் சிறிது சிறிதாக உடலில் சேகரம் ஆகும். பின்னர் திடீரென்று வயிற்றுப்போக்கு தொடர்ச்சியாக இருக்கும்.
அதற்கு முன்பு வரை அறிகுறி வெளியே தெரியாது. அதுவரை குட்டி யானை சுறுசுறுப்பாக இருக்கும். நன்றாக விளையாடும். தற்போது பராமரித்த குட்டி யானையும் இவ்வாறு பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் முழு விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு, வனத்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தீ மூட்டினர்.