கோனே நீர்வீழ்ச்சியில் புதுப்பெண் உடல் மீட்பு: காதல் கணவனை கைது செய்த ஆந்திர போலீசார்


கோனே நீர்வீழ்ச்சியில் புதுப்பெண் உடல் மீட்பு: காதல் கணவனை கைது செய்த ஆந்திர போலீசார்
x

காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் கோனே நீர்வீழ்ச்சியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. கொலை செய்த கணவனை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 19). இவருக்கும் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 8-வது தெருவை சேர்ந்த மதன் (22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதியிலிருந்து தனது மகளை காணவில்லை என தமிழ்ச்செல்வியின் தாயார் பல்கீஸ் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில், கணவன் மதனை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார்.

எலும்புக்கூடாக மீட்பு

அதில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு மனைவி தமிழ்ச்செல்வியை அழைத்துச்சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கத்தியால் குத்திவிட்டு தான் மட்டும் வந்துவிட்டதாக மதன் தெரிவித்தார். இதையடுத்து செங்குன்றம் போலீசார் அங்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சித்தூர் போலீசார் உதவியுடன் தமிழ்ச்செல்வியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், கோனே நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஒரு புதரில் தமிழ்ச்செல்வியின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. புதுப்பெண் கொலை செய்யப்பட்டு ஒரு மாத காலம் ஆகியதால் அவரது உடல் எலும்புக்கூடாக காட்சியளித்தது. இதற்கிடையே இந்த கொலை ஆந்திர மாநிலத்துட்பட்ட சித்தூர் பகுதியில் நடந்ததால் கொலை வழக்காக பதிவு செய்த செங்குன்றம் போலீசார், காதல் கணவன் மதனை சித்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story