கண்மாயில் மூழ்கிய என்ஜினீயர் பிணமாக மீட்பு
நாலாட்டின்புத்தூர் அருகே கண்மாயில் மூழ்கிய என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே கண்மாயில் மூழ்கிய என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்.
என்ஜினீயர்
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள பிச்சைதலைவன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் சந்தீப்குமார் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்த சந்தீப்குமார் நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள கண்மாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றார்.
மின்னல் தாக்கியது
அப்போது அப்பகுதியில் லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. சந்தீப் குமார் குளித்து கொண்டிருந்த போது அவர் மீது திடீரென மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து ஊரில் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசுக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் கண்மாயில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இரவு 11 மணியளவில் நீரில் மூழ்கி இறந்த சந்தீப் குமார் உடலை மீட்டனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சந்தீப் குமார் தாய் வனிதா ெகாடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.